1 . ஆற்றுப்படலம் - மாதவிக்காப்பியம்

கருவறைக்குள் கருவாக தோன்றி மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐந்து புலன்களின் உருவமாகி அருவவுமாகி எல்லை கடந்து சிறந்து விளங்கும் படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்று வினைகள் புரிந்து எல்லாம் கடந்து ஒருவனாகி இருக்கும் கடவுளின் பெருஞ்செயல் பற்றிக் கூறுவோம்.
1111
005
6. மன்னகம் ஆளும் வாழும் வளரலைக் கடலின் ஓரம் தன்னொளி முத்தும் சங்கும் கண்டிவை அவையே என்று வெண்ணெழில் மேகம் மெல்லக் குறுகவாங் காடிக் கோடித் தன்னலைக் கரங்கள் காட்டித் தண்கடல் அழைத்த தாமால் 7. அலையெழில் கரங்கள் கோடி அணைத்தன மேக மங்கை அழகெழில் கருவால் மேனி செழித்தனள் எழுந்து ஆங்கு நிலைபெறா தசைந்து தென்றல் நடையினும் மெல்லச் சென்று உலகிருள் விலக்கும் செய்யோன் ஒளியையும் மறைத்தா ளாமால்.
8. கடலினை முத்த மிட்டுக் கருவுற்ற காள மேக மடவிள மங்கை வான வெளியிடை உலவி வண்ண மடவிள மயிலின் கூட்டம் மகிழ்வுடன் எழுந்து நோக்க நெடிதுயர்ந் தோங்கும் குன்ற மிசையெழிற் காட்சி தந்தாள்
9. மண்ணகம் செழித்தா லன்றி வானகத் தேவர்க் கென்றும் எண்ணிய பூசை கிட்டா தெனமழை பொழியும் மேகம் மண்ணகத் துயிர்கள் யாவும் மனங்களித் தெழுமின் என்று தண்ணிளங் காற்றுத் தூதன் சாற்றினன் திசைக ளெட்டும்.
10. அலைகடல் புணர்ந்து பெற்ற அழகுடன் தோன்றி மின்னல் ஒளியிடை விளங்க எட்டுத் திசையிசை முழவு கொட்டி உலகுயிர் யாவும் கண்டு உவப்புற உயர்ந்த மேடை மலைமிசை எழுந்து மேக மகளசைந் தாடி னாளால். 11. ஆடிய மேகம் கண்டு அஞ்சிறை விரித்து மஞ்ஞை ஆடிய தாங்கு கோடி மரஞ்செடி கொடிகள் காலில் ஆடின தேனை உண்டு ஆடின வண்டு தும்பி ஆடின புட்கள் வானத் தமிழ்தம்வந் தடைந்த தென்று.
12. கோடெலாம் எழுந்து நின்ற மரஞ்செடி கொடிக ளாட ஆடிய காலில் வண்ண அலை நலம் விளங்க எங்கும் ஆடிய நீரில் கூடி அகமகிழ்ந் திசைந்து பாடி ஆடின நுணலும் மீனும் ஆடிய அலைமே லேறி.
13. குஞ்சிவன் தோளில் ஆடக் குமரரும் ஆடி னாரால் வஞ்சிநுண் ணிடையின் மாதர் மகளிரும் ஆடி னாரால் அஞ்சுவன் புலங்கள் வென்ற அருந்தவப் பெரியார் தாமும் மஞ்செழுந் தாட நோக்கி மனங்களித் தாடக் கண்டர்
14. கொடுவினை புரியும் மன்னன் கோலது வீழக் கொற்ற நெடுங்குடை மன்னன் செங்கோல் நிலமிசை எழுந்த தேபோல் அடுவினை வெம்மை நீங்க அனைத்துயர் இன்பம் எய்தக் குடமலை மனையில் மேக மகள்மழை மகளை ஈன்றாள். 15. அலைவளம் நிறைந்த முன்னீர் ஆளுமா உலகத் தெங்கும் கலைவளம் பெருகத் தெய்வ நெறிநலம் பெருக நான்கு நிலவளம் பெருக வாழும் உயிர்வளம் பெருக மக்கள் உளவளம் பெருக வாங்கு மழைவளம் பெருகிற் றெங்கும்
16. ஆடியல் மயிலின் கூட்டம் அஞ்சின வண்ணச் சோலை பாடியல் குயிலின் கூட்டம் பனித்தன வலிய கையின் கோடுடைக் களிறும் அஞ்சும் பிடியுடன் தழுவி நிற்கப் பீடுகொண்டெழுந்த வெள்ளப் பேரொளி நிறைந்த தெங்கும். 17 தடவரை மேகம் ஆடி ஒளியுடன் பெய்த ஓசை கடுவரல் புனலின் ஓசை நெடுமரம் வீழும் ஓசை இடிபடும் பாறை ஓசை இழிந்துவீழ் அருவி ஓசை இடிகுரல் ஓசை ஓங்கும் பெருவரை நிறைந்த தாங்கு.
18. தேன்மகிழ் குறவர் ஓசை தீப்பட வெடிக்கும் ஓசை மான்கணம் மகிழும் ஓசை மரம்பயில் குரங்கின் ஓசை கான்வரிப் புலியின் ஓசை கடுங்குரல் அரியின் ஓசை தேன்மலர் வண்டின் ஓசை திசையெலாம் மறைந்த தாங்கு
20. கண்ணலம் பெற்ற வண்ணக் கவின்மலர் பிறக்கும் நாற்றம் தண்ணறும் சாந்தின் நாற்றம் அகில்தரு நாற்றம் சூழும் எண்ணரும் நாற்றம் யாங்குமறைந்தன கொல்லோ வானீர் தன்னொடு புணர்ந்த மண்ணின் நாற்றமே நிறைந்த தெங்கும். 21. நெடுமலை மேகம் பெற்ற மழைமகள் தவழ்ந்து சென்று நெடுமரம் தழுவிச் சூழும் செடிகொடி அணைத்து பாறை முடிமுதல் தடவிக் கிட்டும் பொருள்பல எடுத்து உற்ற தடைபல கடந்து வண்ண மலையெழில் அருவி யாவாள்
22. நான்முகன் மனதே தோன்றி நற்றவக் கவேரன் பெற்ற மாண்புறு மகளாய் ஈங்கு மண்மிசை வந்தாள் என்பர் வான்தரு கங்கை சாயக் காவிரி யாகி இன்பத் தேன்தமிழ் நாட்டில் பாயும் செந்தமிழ்ப் பாவை என்பர். 23. அகத்தியன் மகிழ்ந்து போற்ற அம்முனி வரத்தி னாலே இகத்துள தீர்த்தம் யாவும் வணங்குமோர் ஏற்றம் பெற்றாள் மிகுவலி சோழர் நாட்டில் பெரும்புகழ் பெருமை சேர்க்கும் மகளுயிர் யாவும் போற்றும் மாசறு பொன்னின் செல்வி
24. மண்மிசை தோன்றி உள்ளம் மாசுற மகிழ்ந்த மாந்தர் எண்ணரும் பாவம் தீர்க்கும் புண்ணிய நன்னீர் தூய திண்ணிய மனத்தோர் கற்புத் திறநெறி நிற்போர் யாரும் அன்னையாய் வணங்க நாளும் அருள்சுரந் தூட்டு கின்றாள். 25. சந்திர மதிதன் கேள்வன் இந்திரன் தனைய ணைந்த குந்திமா தேவி மைந்தன் சுசீலை மண்டுகம் பன்றி வெங்கொடும் முதலை யார்க்கும் வீடுபே றளித்த தூய கந்தமூ லாதி நன்னீர்க் காவிரித் தெய்வம் என்பர்
26. வான்பெரு மேகம் ஈன்ற வளந்தரு மழைநீர் வெள்ளம் ஊன்பெறு முயிர்கட் கெல்லாம் ஊட்டுதற் கமைந்த பொன்னி மீன்தரு விழியின் மாதர் விரைகுழல் அலையின் வாசத் தேன்மலர் பெற்று முத்தைத் திசையெலாம் வீசு கின்றாள். 27. தேவரும் வணங்கும் தெய்வத் திருப்பதி பலவும் பெற்று மாவளம் படைத்து மக்கள் மனவளம் பெருக்கும் தெய்வப் பாவலர் நாவில் செஞ்சொல் பாட்டென வாழும் வண்ணப் பூவிரி சோலை சூழும் காவிரி அன்னை யாவாள்.
28. கண்டே எனுஞ்சொல் பாவை உமையவள் கொழுநன் ஏவக் குண்டோ தரனின் தாகம் கொல்லவாங் கெழுந்தா ளென்பர் வண்டார் மலர்சூழ் சோலை மருங்கெலாம் அசைந்து ஆடக் கண்டார் களிக்க வையை களிநடம் புரிகின் றாளால். 29. அலைவளர் தண்ணீர்க் கங்கை உளமகிழ் கொன்றை வேந்தன் கலைமதிச் சடையன் நெற்றிக் கண்ணுடை இறைவான் ஈசன். பலவிளை யாடல் காட்டி உலகவர் மகிழ்ந்து போற்ற நிலைபெறும் மதுரை ழூதூர் நீள்புகழ் சேர்க்கும் வையை.

Comments